×

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் இன்று திருமுலைப்பால் விழா

சீர்காழி, ஏப்.11: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வர சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருநிலைநாயகி ஞானப்பால் வழங்கிய நிகழ்ச்சி ஆண்டு தோறும் திருமுலைப்பால் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு திருமுலைப்பால் வழங்கும் விழா இன்று (11ம் தேதி) மதியம் 12 மணியளவில் நடைபெற உள்ளது.  விழாவையொட்டி திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அவரவர் சன்னதியிலிருந்து புறப்பட்டு கோயிலில் எழுந்தருள்வர். அங்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருஞானசம்பந்தர் பல்லக்கில் புறப்பட்டு பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருள்வார். திருநிலைநாயகி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்து குளக்கரையில் எழுந்தருளி தங்க கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

 இதனை தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர் திருநிலைநாயகி வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதான வாயில் வழியாக வந்து திருஞானசம்பந்தருக்கு காட்சி அளிப்பார். அப்போது சுவாமி அம்பாள், திருஞானசம்பந்தருக்கு தீபாரதனை நடைபெறும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தாங்கள் கொண்டுவந்த பாலை சுவாமிகளுக்கு படைத்து எடுத்து செல்வார்கள். முன்னதாக தருமபுரம் ஆதீனம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி சிறப்புரையாற்றுவார். இரவு திருஞானசம்பந்தர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி திருத்தாளமுடையார் கோயில் தாளபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று திருப்பதிகம் பாடி பொற்றாளம் பெற்று மீண்டும் கோயிலை வந்தடைவார்.
நேற்று திருமுலைப்பால் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தினர்.


Tags : celebration ,Tirur Tirur Tirunelveli ,temple ,
× RELATED ஆதிவராக பெருமாள் கோயில் ஜெயந்தி விழா கொண்டாட்டம்